Kids say "Lets' tree " இளஞ் தளிர்களின் "மரம் செய்ய விரும்பு "

Kids say "Lets' tree "
இளஞ் தளிர்களின் "மரம்  செய்ய விரும்பு "

தமிழ் நாட்டில் 100 கோடி  மரம் நட்ட  திருப்தி 18-4-2018அன்று நூறு மழலை  பள்ளிக் குழந்தைகளுடன் மரங்கள்  பற்றி பேசியவுடன்  கிடைத்தது, பெரும் நம்பிக்கை  கிடைத்தது. தமிழகத்தின்- இந்தியாவின்- உலகத்தின்  வருங்காலம் மிக மிக பிரகாசமாக  இருப்பதற்கான அறிகுறியாக  இந்த பள்ளிக் குழந்தைகளின் உற்சாகம் தந்தது.

இடம் . பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளி , நாராயணபுரம், பள்ளிக்கரணை, சென்னை .
Bright Students Panchayat Union school


CTS நிறுவனத்தின் OUTREACH programmeன் ஒருங்கிணைப்பாளர் ,பொறுப்புள்ள  குடிமக்கள் இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டவருமான திரு. சங்கர், இந்த  ஆரம்ப பள்ளியின் 3வது , 4வது , 5 வது படிக்கும்  குழந்தைகளிடம் பொ .கு.இ.யின் பள்ளிகளில் கோடை கால செயல் திட்டம் என்ற  நமது காணொளியின்படி https://www.youtube.com/watch?v=oojrZi9_Cqo இந்த பள்ளியில்  குழந்தைகளிடம் மரம்  செய்ய விரும்பு  என்று பேச சொன்னார் . அதற்கு  பள்ளியின் தலைமை  ஆசிரியை அவர்கள் அருமையான  ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இன்னம் இரண்டு  நாட்களில் கோடை விடுமுறைக்கு  செல்வதற்கு இருந்தனர்.  முதல்  ஆளாக  என்னை பேச திரு. சங்கர் அழைத்தார்.

குழந்தைகளிடம் " உங்களுக்கு எதுக்கு  இப்போ கோடை விடுமுறை ??"  என்று கேட்டேன் .
" வெயில்  அதிகமா  அடிக்கிறதால " என்று பல குழந்தைகள் கூறினர் 
" வெயிலை குறைக்க என்ன பண்ணலாம் ?? " நான்  மறுபடியும் கேள்விக் கேட்டேன் . 
" நிழல்ல நிக்கலாம் " " வீட்டுக்குள்ளயே இருக்கலாம் " என்ற பல  குரல்கள்  கேட்டது " மரம்  நடலாம் " என்றான்  ஒரு  சிறுவன் எழுந்து வீரமாக .

அந்த சிறுவனுக்கு பாராட்டை தெரிவித்துவிட்டு அடுத்த கேள்விக் கேட்டேன்
" ஆத்திச்சூடி தெரியுமா ?" என்றேன் .

கோரஸாக " அறம் செய்ய  விரும்பு , ஆறுவது சினம் ,.............." என்று அனைத்து செய்யுளையும் குழந்தைகளுக்கே உரிய மழலை குரலில் உச்ச ஸ்தாயியில் கூறினர்.  அவர்களின் அமுத  மழை  அடங்கியபின் மீண்டும் கேள்வி :
" அறம் என்றால் என்ன  ??" என்று கேட்டேன்.
"பாதுகாப்பு " என்றான்  ஒருவன்
"உதவி " என்றாள் ஒருத்தி
"நன்மை " என்றாள் ஒரு சிறுமி
"பண்பு " என்றான்  ஒரு  மாணவன்
குழந்தைகள்  அவர்களின் பதில்கள் மூலம் பிரமிக்க செய்தனர் .
" அருமை அருமை " என்று  கரவொலி எழுப்பினேன்.

" நான் இன்னைக்கு இங்கு ஆத்திச்சுடியில் ஒரு சின்ன மாற்றத்தை கூறவே  வந்தேன் " என்றேன் .

" முதல் செய்யுளான ' அறம் செய்ய விரும்பு ' என்பதில்  முதல்  சொல்லில் ஒரு சின்ன மாற்றம் செய்வோமா ??"
" நீங்க  எல்லோரும்  அறத்தின்  பண்புகள்  என்னன்னு சொன்னீங்க. இதையெல்லாம் நாம்ப ஒரே  செயல்ல செய்யப் போறோம்"

"அது என்னன்னா 'அறம்' வர  இடத்தில 'மரம்' னு  சொல்லப் போறோம் "

" மரம்  செய்ய  விரும்பு " நான்  ஒரு முறை  சொன்னதும் " மரம் செய்ய  விரும்பு "  அந்த அறைக்குள்  பல முறை  பிஞ்சு குரல்களில் எதிரொலித்தது .

"ஏன் மரம் ? மரம்  நமக்கு  என்ன  கொடுக்குது ?" எனது  கேள்விகளை தொடர்ந்தேன்.  ஆச்சரியப்படுத்தின மழலைகளின்  பதில்கள் :

" மரம் நிழல் கொடுக்குது "
"மரங்கள் பழங்கள் கொடுக்கின்றன "
" பறவைகள் கூடு கட்ட இடம்  கொடுக்கின்றன "
"மழை வர வைக்கிறது"
" சூட்டை குறைக்கிறது "

இவர்களுக்கு  நாம்  என்ன புதுசாக  சொல்லப் போகிறோம்  என்று யோசிக்க  வைத்தனர் .

மேலும்  விளிம்பை தாண்டி கேள்விக் கேட்கலாம் என்று " முக்கனிகள் என்னன்னு தெரியுமா ?" என்று கேட்டேன்.

அதிவிரைவாக பதில்கள் பறந்து வந்தன பல குழந்தைகளிடமிருந்து
" மா, பலா, வாழை " . நான் தலைமை ஆசிரியை திருமதி. கயல்விழிக்கு நன்றி தெரிவித்தேன் இத்தனை உற்சாகமான  குழந்தைகளை உருவாக்கியதற்காக.

நான் எடுத்து சென்ற  மாம்பழத்தை காண்பித்தேன் " மாம்பழம் " கேட்பதற்கு முன்னாலே  பதில் . " எப்படி சாப்பிடுவீங்க ?"
"கடிச்சு, நக்கி  சாப்பிட்டு , கொட்டைய  துப்பிடுவோம் " மாணவர்கள் .
" அருமை . நல்லா  சுவைச்சு  சாப்பிடுங்க , உங்கள் வாயில  எச்சில் ஊற ஊற அந்த கொட்டை நன்றாக  முளைவிட்டு வளர வாய்ப்பதிகம் . அதனால  அம்மாகிட்ட கேட்டு கொட்டை பகுதியையே சாப்பிடுங்க , கொட்டைய ஒரு பிளாஸ்டிக் கவர் ல  போட்டு  கொஞ்சம் மண் போட்டு தண்ணி விடுங்க. செடி வந்துடும் "
" இதே மாதிரி  பலா சுளை சாப்பிட்டு அதன்  கொட்டையை கவர்ல போட்டு மண் போட்டு  செடியாக்குங்க. "

"சரி . வாழையை எப்படி  செய்யலாம் ??"
வாழையிலை தான் குழந்தைகளுக்கு கொஞ்சம் சறுக்கியது.
" வாழை தோலை போட்டா  வளரும் " சொன்னது ஒரு வாண்டு .

" முக்கனிகள்ல வாழை மட்டும்  கொட்டையிலிருந்து வர்ரதில்ல , வாழை வளரும்னா அதற்கு  வாழை கிழங்கு வேணும். அதனால  தான் ' வாழையடி  வாழையாக 'குன்னு  தமிழில் சொல்வோம். பெரிய  வாழை மரத்தடியில வளர்ற சின்ன கன்னு வைச்சு தான்  புது மரம்  வளர்க்க  முடியும் . யாரும்  எச்சில்  பண்ணாம  வளர்றதுனால தான்  வாழையை கடவுளுக்கு படைப்பதாக சொல்வாங்க "

ஆவின் பால்  கவரில்  வளர்த்த புளியமரக் கன்றை  எல்லா குழந்தைகளுக்கும்  தெரியும்படி காண்பித்தேன் .


ஆச்சரியப்படும்படி ஒரு  இளம்  துளிர் " புளியஞ் செடி " என்றது.
" எப்படி வளர்க்கலாம் ?" கேட்டேன்
" எங்க அம்மா ரசம் வைச்சுட்டு புளியங் கொட்டைய தூக்கி போடுவாங்க, செடி  வளர்ந்துரும் " என்று  ஒரு சிறுவன்  வீட்டில பார்த்ததை  அப்படியே வர்ணித்தான். " அருமை, அருமை , வேற  எதுக்காக புளிய பயன்படுத்துவாங்க " னு கேட்டேன்.
"புளிக் குழம்பு " "சாம்பார்", "வத்த குழம்பு " "புளிச் சோறு "  என்று பல  குழந்தைகளும் உற்சாகமா பதிலளித்தனர்.
" அம்மா புளிய கரைசசாலே அம்மா  புளியங்கொட்டையை தாங்கன்னு கேட்டு வாங்குங்க , அதை இந்த மாதிரி  பால் கவரில் போட்டே  வளர்க்கலாம் " என்றேன் .

புளியன்கொட்டையை காண்பித்து  " யாரென்று  தெரிகிறதா " என்ற பாடலின் முதல் வரியை  பாடினேன். குழந்தைகள்  உடனே " விஸ்வரூபம் " என்றனர் .  "ஆமாம் இந்த விதையின் விஸ்வரூபமே பெரிய மரம் . நம்ம எவ்ளோ  ரோடுகளில் பாத்துருக்கோம் , புளிய மரம் எவ்ளோ பெரிசா விரிஞ்சு நமக்கு  நிழல் தருது. அதனால  ஒவ்வொரு மரமும்  ஒரு விதையின் விஸ்வரூபம் "

குழந்தைகள் பலரும் கைகளை விரித்து  காண்பித்து மகிழ்ந்தனர்.

அப்போது  ஒரு சிறுமி எழுந்து " செடியை வெயில்ல  வளர்க்கணுமா இல்ல  நிழல்ல வளர்க்கணுமா " என்ற  அருமையான  கேள்வியை  கேட்டாங்க .
பிரமிச்சு  போய் சொன்னேன் " மிக  மிக  ஆழமான  கேள்வி " கைத்தட்டினேன்.

"சின்ன  குழந்தைகளை வெயில் வைச்சு வளர்ப்பங்களா நிழல்ல வளர்ப்பங்களா " கேட்டேன் .
" நிழல்ல தான் " அப்படினாங்க பலரும் .


" அப்ப  அப்ப குழந்தையா வெளியில கூட்டிக்கொண்டு போய்  காண்பிப்பது போல் வெயில்ல  கொஞ்சமா  காண்பிங்க " என்றேன் .

இந்த  அருமையான  அனுபவம் மேலும் பல கேள்விகளுடன் தொடர்ந்தது. குழந்தைகள்  எனக்கும் பெரியவர்களுக்கும்  பல  புரிதல்கள்  ஏற்படுத்தினாங்க .  இந்த சிறுவர்கள் ஜுன் 2ம்  தேதி  மீண்டும்  பள்ளிக் கூட்டத்திற்கு  வரும் போது  ஆளுக்கு 5 மரக்  கன்றுகளை வளர்த்து வந்து ஆசிரியர்களிடம் தருவோம்  என்று  உறுதியளித்தனர் .


பூவரசு மர  விதையை காண்பிச்சவுடன் பல  சிறுமிகளும்  ஒன்றாக  சேர்ந்து ஒரே  குரலில் " பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதி  வந்தாச்சு " என்று  பாடி எங்களுக்கு நல்ல  எதிர்காலத்தின் மீது நம்பிக்கை தந்தனர் . சினிமாவில் குழந்தைகளிடம் சில  நல்ல சேதிகளும் சென்று  சேர்ந்ததில் சந்தோஷம்  என்றேன்.  35 ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு பாடலை  இந்தக் குழந்தைகள்  தெரிந்து வைத்திருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன்.

பள்ளி மாணவர்களிடம் குல் மொஹர் விதைகளை  காண்பித்துக் கேட்டேன் " இது எந்த  மரத்து விதைகள் ?"  உடனே "சிவப்பா பூ பூக்கும் " என்றனர் .
" இந்த  மரம்  குல்லுனு பூ பூப்பதால் இந்த  மரத்தின் பெயர் குல் மொஹர் " என்றேன் .
ஒரு சிறுவனிடம் ஒரு விதை  பட்டையை  உடைத்து இதில்  எவ்வளவு விதைகள்  உள்ளன  என்று  எண்ண  சொன்னேன். அவன் "21" என்றான் . ஒரு  மரத்தில்  ஒவ்வொரு  ஆண்டும் 2000 விதை பட்டைகள்  கூட  உருவாவது உண்டு - அப்படி என்றால் ஒரு மரம்  ஒரே  வருடத்தில் 21 x 2000 = 42,000 விதைகள்  அதாவது 42,000 மர கன்றுகள்  உருவாக சாத்திய கூறுகளை  ஏற்படுத்துகின்றன. இதனை  காக்கைகள் உண்டு பரப்புகின்றன.  நாமும் பரப்புவோமா ? செய்வீர்களா ??? என்றேன்  " செய்வோம் " என்று உறுதியளித்தனர்  குழந்தைகள்.

அரசாங்க பள்ளிகளை யாரும் குறைவாக  எண்ண  வேண்டாம் , இதே  அளவு  உற்சாகத்துடன்  தைரியமாக ஆசிரியர் முன்னிலையில் எத்தனை பள்ளி  மாணவர்கள் எழுந்து கேள்வி கேட்பார்கள் என்று நான் பள்ளியில் படித்த காலத்திலிருந்து  நினைத்து பார்த்து  இந்த பஞ்சாயத்து பள்ளியின்  தலைமை ஆசிரியர் மற்றும்  ஆசிரியர்களை பாராட்டி வியந்தேன்.

"நல்ல  பழக்கம் " என்ற  அமைப்பில்  இருந்து மாதாமாதம் இந்த குழந்தைகளின் அன்றாட  பழக்க வழக்கங்களின் சுய மதிப்பீட்டை மதிப்பிட்டு வகுப்பு  வாரியாக பரிசுகளை வழங்கினார்.


அதே  போல் மற்றோரு  நண்பர் ஆங்கில எளிய  வாக்கியங்களுக்கான  பயிற்சியையும்  வழங்கினார்.

பொறுப்புள்ள  குடிமக்கள் இயக்கத்தின் ஆலோசகர் திரு. சுரேஷ் உணவை  எப்படி நிதானமாக  மென்று முழு கவனத்துடன் உண்ண  வேண்டும் விளக்கமளித்தார்.

நம்மாழவார் அய்யாவின் சீடர் திரு. பிருதிவிராஜ்  அவர்கள் அனைவரையும்  பங்களிப்பில்  உற்சாகமூட்டினார்.

இந்த உற்சாகமிகு மாணவர்களை  கண்டு தமிழ்நாட்டின், இந்தியாவின் ,உலகின்  எதிர்காலத்தை குறித்து "பூமியின் தினமான " 22 ஏப்ரல் 2018 ல் பெரும் நம்பிக்கை  கொள்கிறோம் .

மரங்களை போன்று  பொறுப்புள்ள உயிரினங்கள் மூலம் பொறுப்புள்ள  சமுதாயம் படைப்போம் .

ஜூனில் பள்ளி  திறக்கும் போது எத்தனை குழந்தைகள் எத்தனை மர கன்றுகளுடன் என்று  பார்க்க  ஆவலாக  உள்ளது.

வாழ்க மரங்களுடன்.




Comments