தருஓங்கு சென்னையில் மலைகள் தோறும் மரங்கள் Tharu (Tree) Ongu (Plenty)


11.march. 2018
வாழ்க மரங்களுடன் !!!
சென்னை திருவொற்றியூரிலிருந்து தொடு சிகிச்சை நண்பர் திரு.காளிராஜன் அவர் நடத்தும் " மருந்தில்லா மருத்துவம்" கருத்தரங்கில் பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் "மலைகள் தோறும் மரங்கள்" திட்டத்தை பற்றி பேச 10. மார்ச். தொலைபேசியில் அழைத்தார்.

நிகழ்ச்சி நடந்த இடம் : "சிவாமிர்த ஆத்ம ஞான ஆசிரமம் " , வடக்கு மாட வீதி.




திருவொற்றியூர் அதிகம் என்னை கவரும் இடம் , இன்று வெளியூரில் ஒரு வேலை இருந்தது , இருப்பினும் ஆதிபுரிஸ்வரனின் அழைப்பாக ஏற்று சென்று பேசினேன்.


அங்கே பேசியது இங்கே :
கலியுகமான காளியுகத்தில் தீயன அழித்து நல்லன மேலோங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நண்பர் திரு.காளிராஜனின் அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ளேன். கலியின் தொடக்கத்தில் பிரளயம் முடிந்து முதன் முதலில் இறைமயை ஒற்றி எடுத்த ஊர் - திருவொற்றியூர். ஆதிபுரீஸ்வரரானாக இறைவன் தியாகராஜனாகவும் படம்பக்க நாதராகவும் வடிவுடையம்மனாகவும் அருள்பாலிக்கும் இடம். 

இந்த இடத்தின் தல விருட்சம் - மகிழ மரம் - இங்கு சுந்தரருக்கு சிவபெருமான் மகிழமரமாகவே வந்து காட்சி அளித்தாராம்.
"தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கும் கந்தவேளே" இது வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி ராமலிங்க அடிகளார் திருவருட்பாவில் தெய்வமணிமாலையில் பாடிய ஒரு பிரபலமான பாடல் வரி. இதில் முதல் பாடல் "திருஓங்கு" என்று தொடங்கும் பாடலில் "தரு ஓங்கு சென்னையில்" என்று குறிப்பிடுகிறார். அப்படியென்றால் தரு ஓங்கி இருந்தால் தருமம் ஓங்கியிருக்கும் என்று பொருள் கொள்ளலாம்  அல்லவா ??"

தெய்வமணிமாலை

திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள் 
திறலோங்கு செல்வம்ஓங்கச் 
செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம் 
திகழ்ந்தோங்க அருள்கொடுத்து 
மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க 
வளர்கருணை மயம்ஓங்கிஓர் 
வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த 
வடிவாகி ஓங்கிஞான 
உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில் 
ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும் 
உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க 
உய்கின்ற நாள்எந்தநாள் 
தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் 
தலம்ஓங்கு கந்தவேளே 
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி 
சண்முகத் தெய்வமணியே


( இந்த முழு பாடலையும்  இந்த கலந்துரையாடலில் பாடவில்லை  - இது வலைபதிவிற்காக மட்டும் முழுமையாக வழங்கப்படுகிறது. இந்த பாடல் எனக்கு இன்று கண்ணில் பட்டதே இயற்கையின் பேரருள் என்றே தோன்றுகிறது. எனக்கு        
" தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்தலமோங்கும் கந்தவேளே"
மட்டுமே பரிச்சயம் - இந்த தருமமிகு என்ற சொல்லிற்கு அர்த்தம் என்ன என்று தேடப் போக " தரு ஓங்கு " என்ற பாடல் வரி இன்றைய தலைபிற்கு கிடைத்தது அருட்பெருஞ்ஜோதியின் அருளாகவே பார்க்கிறேன் )

இந்த இடத்தில் நான் பார்வையாளர்களை பார்த்துக் கேட்டேன் - " இப்போது சென்னையில் தருமம் மிகுந்து இருக்கிறதா ? குறைந்து இருக்கிறதா ? "

பலரும் "தருமம் குறைந்து இருக்கிறது" என்றே கூறினர் .

அதாவது " தரு " குறைந்தால் " தருமம்" குறைகிறது, தரு ஓங்கினால் தருமம் ஓங்கும் என்று வள்ளலார் வாக்கு. 

கடைஏழு வள்ளல்களின் ஆட்சியும் இன்றைய "தருமபுரி" மாவட்டத்தை ஒட்டியே நடந்துள்ளது.
மறுபடியும் ஒரு கேள்வி " திருவொற்றியூரிலிருந்து 1ம் எண் மாநகரப் பேருந்து எங்கே செல்கிறது ? " " திருவான்மீயூர்" என்ற பதில் வந்தது.

மற்றும் ஒரு கேள்வி நான் கேட்டேன் " இராமாயணம் எழுதியது யார் ?"
" வால்மீகி" என்ற பதில் வந்தது.

வான்மீகி என்ற அவருக்கு பெயர் வந்ததற்கு காரணம் அவர் வன்னி மரக்காட்டில் தவமிருந்ததால் தான் அவருக்கு  - வான்மீகி - அதனால் ஊருக்கு பெயர் " திருவான்மீகியூர்" மருவி " திருவான்மீயூரானது.

வான்மீகி முனிவர் முனிவராகும் முன்பு ஒரு வேடனாக வாழ்க்கையை வாழ்ந்தவர், அப்பொழுது அவரது பாவங்களை அவர் குடும்பத்தினர் யாரும் ஏற்று கொள்ளவில்லை என்றவுடன் ஞானத்தை தேடிய போது நாரத முனிவர் வந்து உபதேசித்த மந்திரம் "மரா" என்ற மந்திரம்.

பாருங்கள் தமிழ் எத்தனை அழகான நல்ல அதிர்வுகள் உள்ள மொழி. ம,ர என்ற இரண்டு எழுத்து ஒரு வேடனை பெரிய முனிவராக்கிவிட்டது.  "மர" என்ற சொல்லை உச்சரித்தாலே நமக்கு தவம் கைகூடுகிறது. "இராமாயணம்" என்ற மாபெரும் காவியத்தை உருவாக்கும் வல்லமை கொடுத்துள்ளது.

யாராவது சும்மா நின்று கொண்டே இருந்தால் நாம் என்ன சொல்வோம் "மரம் போல்   நிற்காதே " மரம் போல்   நிற்பது என்பதே ஒரு மாபெரும் தவம். மரம் போல் ஒற்றை காலை மடக்கி நின்று நாம் செய்யும் யோகாசனாவிற்கு பெயர் கூட "விருக்ஷாசனா" அதாவது மர ஆசனா தான்.  ஒன்று செய்யாமல் சிவனே  என்று நிற்பது மிகப்பெரிய தவம். அதனை எல்லா மரங்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் செய்கின்றன.

"சும்மா இருத்தலே சுகம்" - ஏன்றார் தாயுமானவர். ஆனால் மரங்கள் சும்மா இருப்பது போல் தவம் செய்து கொண்டே பல உயிர்களும் வாழ வழி செய்கிறது. அதனால் மரம் தான் ஒரு மிகப் பொறுப்பான உயிரினம்.  அதனாலேயே நாம் பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்திற்கும் "ஓரு மரத்தை தான் " அடையாளமாகக் (LOGO) ஆக வைத்துள்ளோம்.

தவம் என்றவுடன் நினைவிற்கு வருவது  மரத்தடியில் உட்கார்ந்து தவம் செய்யும் முனிவர்கள். மரத்தின் அலைவரிசை மிகவும் சன்னமாக இருப்பதால் சஞ்சலம் மிகு மனித மனத்திற்கும் மரத்தடியில் அமரும் போது மனது அடங்கி தவம் கூடுகிறது.

இதனாலேயே பல பெரிய முனிவர்கள் , யோகிகள் அனைவருமே தங்கள் தவப் பலனை தருவின் அடியிலேயே பெற்றார்கள்.  இளவரசன் சித்தார்தன் போதி மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றதால் தான் பெளத்தன் எனும் புத்தன் ஆனான்.

இப்பொழுது ஒரு கேள்வி பார்வையாளர்களை நோக்கி " அசோகரை தெரியுமா ? அவர் என்ன செஞ்சாரு " ன்னு கேட்டேன்.

பலரும் " அசோகர் ஒரு அரசன் , அவர்கள் மரங்களை நட்டார் " பதில் சொன்னாங்க.

அப்ப நான் " கலிங்கத்துப் பரணி கேள்விபட்டிருக்கீங்களான்னு " கேட்டுட்டு " ஒருவருக்கு பரணி பாடனும்னாலே ஆயிரம் யானைகளை கொன்றாதான் பாடினாங்க , நம்ம் வீரப்பனுக்கு கூட பரணி பாடனும்னு சில பேர் நினைச்சாங்க.  அசோகர் இன்றைய ஒடிசாவான கலிங்கத்தின் பேரில் அன்றைய மகத நாட்டின் அரசனாக (இன்றைய பிஹார்) போர் தொடுத்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொல்லப்படுவதற்கு காரணமானார். ஆனா நாம் யாருக்கும் அவரு கொன்னது ஞாபகம் இல்ல அவர் மரங்களை நட்டார்னு தான் ஞாபகம் இருக்கு. ஏன் ????


மரங்களை நடுவது மகா புண்ணிய காரியம் பல பாவங்களை போக்க கூடியது.

அசோகருக்கு இந்த ஞானத்தை வழங்கியதே அவரை போர்க்களத்தில் சந்திச்ச நம்ம போதி மரத்தடியில ஞானம் பெற்ற புத்தர் தான். 

அதனால அதிகமா மரங்கள நட்டோம்னா நிறைய உயிர்களை கொல்லக்  கூடிய வெறியர்களை நாம் நல்ல மனிதர்களா மாத்த முடியும்.

இது போல தான் சமண மதத்து மகாவீரரும், தவத்தின் மூலமாகவே தன் சீடர்களுக்கு ஞானம் போதித்த தட்சிணாமார்த்தியும், மயிலாப்புர் கற்காம்பாளும் மரத்தடியில தவம் புரிஞ்சு தான் தங்கள் தவ வலிமையும் ஞானம் பெற்று தங்கள் இலக்கினை அடைந்தார்கள்.

ஏனென்றால் மரம்  தான் - பிரபஞ்சத் தாய்  ,  சூரியன் தான் - பிரப்ஞ்ச தந்தை. 

நாம் கேட்கும் வரங்களை தர வல்ல தருவாக இருப்பவள் நம்து அனைவரின் பிரப்ஞ்ச தாயான மரங்கள் தான்.

உங்களுக்கு என்ன் வேணா ஆசை இருக்கட்டும் ? அதை மரத்தை கட்டிக் கொண்டு விரும்பிய வரம் கேளுங்கள் - பிரப்ஞ்சத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் ஆசை நிறைவேறும்.

  • தரும் - அதனால் அது பேர் தரு- கற்பகத்தரு

  • போதி - தமிழில் - அரச மரம்

  • அரசு, அரசாங்கம், அரசன், அரசி, அரசியல் என்ற வார்த்தைகள் அரச என்ற அரச மரத்தின் ஆளுமை தன்மையின் வெளிப்பாடு தான்.

  • திருவேற்காடு , மாங்காடு, திருவாலங்காடு என்ற ஊர் பெயரெல்லாம் மரங்களை பொறுத்தே வழங்கப்படுகிறது.

  • கடம்ப மரத்தின் பெயராலேயே முருகக்கடவுளுக்கு கடம்பன் என்ற பெயரும், அம்பாளுக்கு  கடம்ப வன வாசினி என்ற பெயரும் உள்ளது.

  • அரச மரத்தை யாராவது விதை போட்டு வளர்த்திருக்கிங்களா ?  அப்படி யாரெலேயும் எளிமையாய் வளர்த்துட முடியாது. அது பறைவைகள் அரச மரத்தின் பழங்களை சாப்பிட்டு அதன் எச்சதின் மூலமாக போட்டா காங்கீரிட்டல கூட எளிமையா வளரும்.


மலைகள் தோறும் மரங்கள் :

இப்ப தமிழநாட்டில் எல்லோரும் காவிரி நதி நீர் வாரியம் அமைப்பாங்களா மாட்டாங்களான்னு பட்டிமன்ற விவாதம் நடத்தி நேரத்தை வீணடிச்சு இருக்கோம் !!!

இப்ப வெயில் காலம் வருது . செய்தில எந்த இடத்தில வெப்பம் அதிகம் பதிவாச்சுன்னு செய்தி போடுவான்???
பார்வையாளர்கள் பலரும் " வேலூர் " என்று குரல் கொடுக்கின்றனர்.
"ஏன் வேலூர், திருவண்ணாமலை மாவட்டகள்ல அதிகமா பதிவாகுதுன்னு சொன்னா , இந்த மாவட்டங்கள்ல நிறைய மலைகள் இருக்கு.ஆனா எப்படி இருக்கு ??? மொட்டை மொட்டையா இருக்கு!!!! மரங்களே இல்ல !!. அதனாலே சூரியனின் வெப்ப கதிர்களை அப்படியே பிரதிபலிப்பதால் இந்த மாவட்டங்கள்ல வெப்பம் அதிகமா இருக்கு "
"காவிரி எங்க உறபத்தியாகுது " என் கேள்வி.
"குடகு மலை" பார்வையாளர் பதில்.
" அந்த குடகு மலைக்கு காவிரி எங்கிருந்து போச்சு " என் கேள்வி.
பார்வையாளர்களிடம் பதில் இல்லை.
" அட நம்ப இப்ப இருக்குற திருவொற்றியூர் பக்கத்தில இருக்கிற வங்காள விரிகுடா கடல்ல இருந்து ஆவியானதான் , அது மேகமாகி, காத்துல நகர்ந்து நகர்ந்து போய் இருக்கிறதிலேயே குளுமையான மலைகள்ல முட்டி நீரோடையாய் நதியாய் மாறி ஒடி மீண்டும் கடலுக்கே வருது."
நானே தொடர்ந்து " அப்போ நம்ம வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்ல இருக்குற மலைகள குளிர்விச்சோம்னா - இங்கேயிருந்து கிளம்புற மேகம் அப்படியே இந்த மலைகள்லேயே இறங்கி நமக்கு பாலாறாகவும், தென்பெண்ணையாகவும், செய்யாறாகவும், குசஸ்தலை ஆறாகவும் ஒடி நம்ம தமிழனாட்டுக்கு தேவையான தண்ணீர கொடுக்கும் இல்லையா ? மலைய எப்படி குளிர்விக்கறது ??? மரங்கள அதிக அளவில் நட்டு வளர்த்தோம்னா மலைகள் குளிரும், மேகங்கள் பனித் துளிகளா இறங்கி நீரோடையா இறங்கி நதியா ஒடி நமக்கு தண்ணீர தந்துடும்.
இங்க ஒரு கேள்வி " உலகத்தில் அதிக மழை பெய்யக் கூடிய இடம் எது ??"
" மேகாலயவில் இருக்கும் சிரபுஞ்சி" ஒரு அம்மாவின் பதில்.
" சரிம்மா. ஆனா உண்மையான பதில் என்னன்னா நமது நீலகிரி மலை தொடர்கள் தான். முழுமையான் கோயம்புத்தூர் மாவட்டம் இருந்தப்போ கோவை தண்ணீர் மிகு மாவட்டமா இருந்தது , ஆனா தண்ணீர் கஷ்டமிகு மாவட்டமாயிடிச்சு "
"ஏன் ? நாமெல்லாம் டீ குடிக்கிறதனால தாங்க"
"ப்ரிட்டிஷ் காரன் சீனாவோட தேயிலை வியாபாரத்தை தோற்கடிக்கனும்னு ஊட்டி, டார்ஜிலிங்க் மாதிரி மலைபிரதேசங்களல்லாம் உயரமான பல மரங்களை வெட்டி, தேயிலை மரங்களை உயரமா வளரவிடாம வெட்டி வெட்டி நமக்கு டீயா குடிச்சிட்டு இருக்கோம். நாம் டீ குடிக்கறத நிறுத்தினோம்னாலே நாம காவிரிய நாமளே உற்பத்தி செஞ்சுடலாம். இங்க இந்த நிகழ்ச்சியில் எல்லாருக்கும் மூலிகை டீ ஆவாரம் பூவிலிருந்தும் கருப்பட்டியிலும் கொடுத்தாங்க- மூலிகை டீயை குடிப்போம் தேயிலை டீயை தவிர்ப்போம் "
" அப்ப நாமெல்லாம் ஒரு புதிய ஆத்திசூடிய படைப்போம் "மரம் செய்ய விரும்பு "
"அறம் செய்ய விரும்பு " எனறு யார் சொன்னாங்க " என் கேள்வி
"அவ்வையார்" ன்னு மக்கள் பதில்.
"தேர்தல் மீட்டிங்கிலே அம்மையார் கடைசியா என்ன கேப்பாங்க ???"
" செய்வீர்களா ?? செய்வீர்களா " மக்கள்.
"இப்ப நானும் உங்ககிட்ட அததான் கேக்கிறேன் 'மரம் செய்வீர்களா'"
"மரம் செய்வோம் " மக்கள் கோரசாக.
"மரங்களால் நாம் மரங்களுக்காகவே நாம் " என்று கூறி விடை பெறுகிறேன் "

"இந்த நிகழச்சியை ஏற்பாடு செய்திருக்கும் திரு. காளிராஜனையும் இணைச்சதே ஒரு மரம் தான் . அந்த வாழந்த மரம்- நம்மாழவார் அய்யா .

வேப்பமரத்தின் காப்புரிமை வேணும்னு அமெரிக்காக்காரன் உரிமை கொண்டாடினப்போ வேப்பமரத்திற்கும் நமது நாட்டிற்கும் உள்ள நீண்ட நெடுநாள் தொடர்ப்பை நிலைநாட்டிய புகழ் நம்மாழவார் அய்யாவையே சாரும். அய்யாவின் வழியில் இயற்கையோடு இயைந்து வாழ்வோம்"

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு திருவொற்றியூரில் இருக்கும் பட்டினத்தார் கோவில் சென்று அங்கிருந்த "பேய் கரும்பு" பார்த்து வணங்கிவிட்டு வந்தேன்.





பட்டினாத்தார் கோவிலில் பார்த்த ஒரு விசித்திர மரம்
BOAB TREE???


வாழ்க மரங்களுடன். வாழ்க வையகம்.
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் சார்பாக கிருஷ்ணகுமார்.


Comments

  1. என்ன ஒரு அற்புதமான சொற்பொழிவு!நன்றி

    ReplyDelete

Post a Comment